QCC - குயர் இலக்கிய விழா 2018
நாள்: 07 ஜூலை 2018 - காலை 10 முதல் 5.30 வரை | இடம்: கவிக்கோ மன்றம், சென்னை - 04
இந்திய பால்புதுமையினர் இலக்கியங்களையும், வாழ்க்கையையும் பற்றிய பல்வேறு பார்வைகளை ஒருங்கிணைப்பதே குயர் இலக்கிய விழாவின் நோக்கம். இந்த ஒருநாள் விழா கலந்துரையாடல்கள், புத்தக வாசிப்பு, உரைகள் என தொடர் நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்.
இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள், பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவிப்பதே இவ்விழாவின் நோக்கம். இதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு, பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாகும். இவ்வாண்டின் கலந்துரையாடல்கள் பின்வரும் தலைப்புகளில் இடம்பெறுகின்றன:
சிறப்புரை: லிவிங் ஸ்மைல் வித்யாவின் "மெல்ல விலகும் பனித்திரை" புத்தகத்திலிருந்து அவருடைய முன்னுரை.
வாசிப்பவர்: ஷில்பா.
அமர்வு 1: பால்புதுமையினர் குறித்த ஊடக சித்தரிப்புகளும், எழுத்துகளும்
பால்புதுமையினர் பற்றிய ஊடகச் சித்தரிப்புகள் நேரடியாக தினசரி வாழ்க்கையில் விளைவுகளை ஏற்படுத்துபவை. பால்புதுமைச் சமூகத்தின் பிரச்சனைகள், பால்புதுமைத் தனிநபர்கள் தொடர்புடைய வேறு பிரச்சினைகள் இரண்டுமே இவற்றில் அடங்கும். தென்னிந்திய ஆங்கில, தமிழ், அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் இச்சித்தரிப்புகள் நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் பால்புதுமையினர் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது குறித்து துருபோ ஜோதியின் உரையைத் தொடர்ந்து மூன்று ஊடகவியலாளர்கள், இச்சூழலின் பொதுப் போக்குகள், இதிலிருந்து எவ்வாறு முன்னகர்ந்து செல்வது என்பது குறித்து விவாதிக்கிறார்கள்.
பேச்சாளர்கள்: துருபோ ஜோதி (உரை), ராகமாலிகா, பனிமலர் பன்னீர்செல்வம், மண்குதிரை.
அமர்வு 2: பதிப்புத் துறையின் பார்வையில் பால்புதுமை இலக்கியம்
நீண்ட வரலாறும், பன்முகத் தன்மையும்கொண்ட தமிழ் இலக்கியத்தில் பால்புதுமை இலக்கியத்தை பதிப்பாளர்கள் பார்வையில் ஆராயும் அமர்வு. மூத்த எழுத்தாளரும், தமிழில் திருநங்கை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பிரியாபாபு தனது பதிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். தொடர்ந்து தமிழ்ப் பதிப்புச் சூழலில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்து மைத்ரி பதிப்பகத்தின் பிரேமா ரேவதி, கருப்புப் பிரதிகள் அமுதா ஆகியோரும் உரையாடலில் கலந்துலொள்கிறார்கள்.
பேச்சாளர்கள்: பிரியாபாபு, அமுதா, ப்ரேமா ரேவதி. வழிநடத்துநர்: செந்தில்.
அமர்வு 3: இந்தியாவில் பால்புதுமையினரைப் பேசும் இலக்கியங்கள்
பால்புதுமை அடையாளங்களை வரையறுப்பதிலும், பால்புதுமையினர் அல்லாதோருக்கு புரிதலை ஏற்படுத்துவதிலும் இலக்கியங்கள் முக்கியப்பங்காற்றியுள்ளன. அந்த இலக்கியங்களின் நேர் மற்றும் எதிர்மறைதாக்கங்களைக் குறித்து உரையாடுவதே இந்த நிகழ்வு.
சமகால தமிழ் இலக்கியங்களில் பால்புதுமையினர் சித்தரிப்பு மற்றும் அந்த இலக்கியங்கள் பொதுச்சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எழுத்தாளர் தமயந்தி உரையாற்றுகிறார். மதம் சார்ந்த வரலாற்று எழுத்துகள் இந்திய சமூகங்களில் பால்புதுமையினர் அடையாளங்களை வரையறுத்ததில் உள்ள பங்கு குறித்தும், அவற்றின் தாக்கம் குறித்தும் எழுத்தாளரும் வரலாற்றாளருமான நாடிகா உரையாற்றுகிறார். உரைகளைத்தொடர்ந்து சமகால சித்தரிப்புகள் குறித்த உரையாடலும் நடைபெறும்.
பேச்சாளர்கள்: தமயந்தி, நாடிகா.
உரைகள்:
-
கன்னடத்தில் பால்புதுமை இலக்கியம் - வசுதேந்திரா.
-
தி சிங்கி ஹோமோ ப்ரோஜெக்ட் - புதுடில்லியில் வசிக்கும் இரு வடகிழக்கிந்திய ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களால் துவங்கப்பட்ட இணைய ஊடக முயற்சியே சின்க்கி ஹோமோ ப்ராஜெக்ட். வடகிழக்கிந்தியப் பகுதிகளைச் சேர்ந்த பால்புதுமையினரின் கதைகளை, உடலிலும் மனதிலும் பதிந்திருக்கும் அனுபவங்களை, இணைய அச்சு ஊடகங்களில் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
-
தேர்ந்தெடுக்கப்பட்ட பால்புதுமையினர் படைப்புகள் வாசிப்பு
-
அறிமுகம்: ஷீஜி, குயர் சென்னை தொகுப்பு பங்களிப்பாளர்
-
வரைமுறைக்கு அடங்காமல்:
-
அடையாளங்களை மறைத்துக்கொள்ள சமூக ஊடகங்களில் இருக்கும் வாய்புகள், பால்புதுமைச் சமூகத்துக்கு இவ்வூடகங்களில் சுதந்திரமாகச் செயலாற்ற இடமளிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அது ஆதரவு மற்றும் தொடர்புகளைப் பெருக்கிக் கொள்வதற்கான இடமாகவும் இருக்கிறது. மீம்கள் சமகாலத்தில் செய்தியைப் பரப்புவதிலும் விமர்சிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. பெரும்பாலான சமூக ஊடக மீம்கள் சட்டெனக் கடந்துசெல்பவையாகவும், பொருளற்றும் இருந்தாலும் சில தனித்துநிற்கின்றன. சிலர் அதை குறிப்பிட்ட விசயங்களை வலியுறுத்தும் ஊடகமாகவும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் எதிர்பாலீப்பை மையப்படுத்திய பொழுதுபோக்குகள் ஊடகங்கள், இந்த பால்புதுமையை மையப்படுத்திய பக்கங்கள் ஆறுதலாயிருக்கின்றன. நம்மில் சிலருக்கு சமூக ஊடகங்கள் அளிக்கும் அனாமதேயத் தன்மையே நம்மை வெளிப்படுத்திக்கொள்ள ஒரே வாய்ப்பாகவும் இருக்கலாம். தமிழ் மிக்சர் ட்ரோல்ஸ் பக்கத்தினர், ’பொது’ச் சமூகத்தையும் ஊடகங்களையும் விமர்சிக்கும் சில பால்புதுமை மையப்படுத்திய மீம்களை நம்முடன் பகிர்கிறார்கள்.
குயர் சென்னை க்ரோனிகிள்சின் குயர் இலக்கியத் திருவிழா, 2018, சென்னை, பொதுப்பங்களிப்பில், நண்பர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பெயர் வெளியிடாமல் பணமளித்தவர்களின் ஆதரவிலேயே ஒருங்கிணைக்கப்பட்டது. குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் மற்றும் குயர் இலக்கிய விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பாக உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவுக்கும் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள், qlf@queerchennaichronicles.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.
~*~*~