QCC - குயர் இலக்கிய விழா சென்னை 2018 உரையாளர்கள்

பிரியாபாபு

பிரியாபாபு எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், மேடைக்கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2000களின் தொடக்கத்திலிருந்து எழுதிவரும் அவர் இதுவரை ஏழு புத்தகங்கள் எழுதி, அவற்றிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். தமிழகத் திருநங்கைகள் வாழ்வியல், கலாச்சாரத்தை ஆவணப்படுத்தியுள்ள அவர், திருநர் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக பல அரசு, அரசுசாரா நிறுவனங்களோடும் பணியாற்றியுள்ளார்.

ப்ரேமா ரேவதி

பிரேமா ரேவதி திரைக்கலைஞர், செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர். நாகப்பட்டிணம் அருகே வானவில் என்ற பள்ளியை நடத்திவருகிறார். அவ்வப்போது கவிதைகளும் எழுதுகிறார். மைத்ரி என்ற பெண்ணியப் பதிப்பகத்தின் துணைநிறுவனர்.

தமயந்தி

தமயந்தி திருநெல்வேலியில் பிறந்தவர். வானொலித் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். திரைப்படங்களுக்கு திரைக்கதைகளும் பாடல்களும் எழுதியிருக்கிறார். அவரது சிறுகதையையே அடிப்படையாகக் கொண்ட ‘தடயம்’ குறும்படத்தை இயக்கியிருக்கிறார். நிழலிரவு என்ற நாவலும், சாம்பல் கிண்ணம், வாக்குமூலம், ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் உள்ளிட்ட ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். இவரது அடுத்த நாவலான வாதை விரைவில் வெளிவர இருக்கிறது.

அமுதா

அமுதா, தமிழில் செயல்படும் அம்பேத்கரிய பெரியாரிய மாற்றுப் பதிப்பகமான கருப்புப் பிரதிகளின் பதிப்பாசிரியரும் துணை நிறுவனருமாவார். லிவிங் ஸ்மைல் வித்யா, ஷோபா சக்தி உள்ளிட்ட பலரின்‌ முக்கியமான எழுத்துகளை கருப்புப் பிரதிகள் பதிப்பித்துள்ளது. அமுதா அவர்கள் அங்கீகாரம்பெற்ற ஒரு அக்குபஞ்சர் ஹீலிங் வல்லுநரும் ஆவார்.

ராகமாலிகா

ராகமாலிகா கார்த்திகேயன், த நியூஸ் மினிட் தளத்தில் துணை செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பாலினம், பாலியல் மற்றும் சட்டம் குறித்து எழுதுகிறார். டைம்ஸ் நவ், என்டிடிவி-ஹிந்து, டெக்கான் க்ரோனிகிள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமிக்கவர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்ட உதவியாளராக, லோக் சபா உறுப்பினர் கிர்ரோன் கேருடன் த குட் சாமரிட்டன் அன்ட் மிசிலேனியஸ் ப்ரவிஷன்ஸ் பில்லை வரைவதில் பணியாற்றியுள்ளார்.

துருபோ ஜோதி

துருபோ ஜோதி புதுதில்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் பணியாற்றுகிறார். சாதி, பாலினம், பாலியல் இவற்றின் ஊடாடல்கள் குறித்து எழுதுகிறார். தற்போது இலக்கியவிழாக்களில் கிடைக்கும் நேசத்தையும் அவற்றைக்கொண்டு ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்பையும் எதிர்நோக்குகிறார்.

வசுதேந்திரா

வசுதேந்திரா கர்னாடகாவின் பல்லாரி மாவட்டத்திலுள்ள சாந்தூரில் பிறந்தவர். கன்னட எழுத்தாளரான இவர் சந்த புஸ்தகா பதிப்பகத்தை நிறுவி நடத்திவருவதோடு, சந்த புஸ்தகா என்ற பெயரில் விருதொன்றையும் நிறுவியிருக்கிறார். பால்புதுமையினருக்கான உள்ளூர் ஆதரவு அமைப்புகளோடு பணியாற்றுகிறார். பயிற்சிபெற்ற ஆலோசகருமான இவர் பால்புதுமையினருக்கு இலவச ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறார். இவரது 15 கன்னடப் புத்தகங்களும் 1 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்றன. கன்னட சாஹித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஒரு இளம் ஓர்பாலீர்ப்பாளரின் வாழ்வைப் பதிவுசெய்யும் மோஹனஸ்வாமி கதைத் தொகுப்பு ஆங்கிலம், ஸ்பானிஷ், தெலுங்கு, மலையாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழ், மராத்தி, ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

பவல் சகோல்சம்

இம்பாலில் ஒரு மெய்ட்டெய் குடும்பத்தில் பிறந்த பாவெல் தற்போது நஸரியாவில் பணியாற்றுகிறார். நஸரியா லெஸ்பியன, இருபாலீர்ப்பினர், திருநர் நோக்கில் கவனம் செலுத்தும் ஒரு பால்புதுமையினர் பெண்ணிய அமைப்பு. பாவெல் புதுடில்லியில் பெண்ணுரிமைகள் மற்றும் ஆண்களை பாலின சமத்துவத்தில் பங்கேற்க வைக்கும் வளர்ச்சிப் பயிற்றுநராக செயல்படுகிறார். வடகிழக்கிந்தியாவைச் சேர்ந்த பால்புதுமைக் கதையாடல்களைத் தொகுக்கும் சின்க்கி ஹோமோ ப்ராஜெக்டின் நிறுவனர்களில் ஒருவர்.

குமம் டேவிட்சன்

(will be joining virtually)

குமம் டேவிட்சன் பாலின சமத்துவத்துக்காக சமூக ஊஞகங்களில் எழுதும் தன்னிச்சையான பத்திரிகையாளர். பெண்ணிய பால்புதுமை எழுத்துகளை ஒன்றிணைத்து எழுதும் இவர், வடகிழக்கிந்திய பால்புதுமைக் கதையாடல்களைத் தொகுக்கும் சின்க்கி ஹோமோ ப்ராஜெக்டின் நிறுவனர்களில் ஒருவர். 2016இல் தஃப்ளோரெட்ஸ்டோர் என்ற பயண, தோட்டக்கலை குழுமத்தை நிறுவினார்.

நாடிகா

எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான நாடிகா, வரலாறு, தொல்லியல், நகரங்களும் நகர்ப்புறங்களும், பாலினம், மற்றும் இணையம் ஆகியவற்றைக் குறித்து எழுதவும் ஆராயுவும் செய்கிறார். தற்போது பெங்களூருவில் வசிக்கிறார்.

​பனிமலர் பன்னீர்செல்வம்

கோவையைச் சேர்ந்த பத்திரிகையாளரும், செய்திவாசிப்பாளருமான பனிமலர் பன்னீர்செல்வம் தற்போது நியூஸ் செவன் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். ’பீனிக்ஸ் மனிதர்கள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி தொகுத்துவழங்குகிறார். பல முன்னணித் தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ள பனிமலர், சாதி, பெண்ணியம் குறித்து தொடர்ந்து உரையாடி வருகிறார்.

மண்குதிரை

மண்குதிரை, பொறியியல் படித்தவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். 2000களில் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். புதிய அறையின் சித்திரம் என்னும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிற்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். ‘வெம்பா’ உள்ளிட்ட மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன. முன்னோடிக் கவிஞர்களின் கவிதைகளை மதிப்பிட்டுக் கட்டுரைகள் எழுதிவருகிறார்

சிறப்புரை வாசிப்பு

​(லிவிங் ஸ்மைல் வித்யாவின் உரை வாசிக்கப்படும்)

லிவிங் ஸ்மைல் வித்யா

லிவிங் ஸ்மைல் வித்யா ஒரு அரங்கக்கலைஞர். கவிஞர், எழுத்தாளர் மற்றும் திருநர்களுக்கான சமூக செயற்பாட்டாளர். பன்மை தியேட்டர்ஸ் எனும் குழுவை உருவாக்கி இயக்கி வருகிறார். இவரது சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட “நான்னு அவனல்ல அவளு”  எனும் கன்னடத்திரைப்படம் சிறந்த நடிப்பு மற்றும் ஒப்பனைக்கான தேசியவிருதுபெற்றது. சிறந்த கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருது லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு வழங்கப்பட்டது. ஆனந்தவிகடன் சார்பில் 2016-ம் ஆண்டிற்கான டாப் ஐம்பது மனிதர்களில் ஒருவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அமர்வு வழிநடத்துனர்,  வழங்குபவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்

செந்தில்

செந்தில் குவஹாத்தி ஐஐடியில் பட்டம்பெற்று வடிவமைப்பாளராக பணியாற்றும் வரைகலைஞர். பட்டப்படிப்பில் இறுதியாண்டு ஆய்வுக்கட்டுரை பணியிடங்களில் பால்புதுமையினர், மற்றும் பணியிடங்களை மேலும் பாதுகாப்பாக்குவது குறித்து எழுதியுள்ளார். புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகளில் ஆர்வங்கொண்டவர். 2010இலிருந்து LGBTQ+ இயக்கங்களில் தன்னார்வலராக செயலாற்றி வருகிறார். குழந்தைகள், பகுத்தறிவு மற்றும் பால்புதுமை இலக்கியங்களின் தீவிர வாசகர்.

ஷில்பா

மருத்துவப் பட்டதாரியான ஷில்பா, பாலின மற்றும் அ/பாலீர்ப்பின் நுணுக்கங்களிளும், அவற்றின் அரசியலிலும் ஆர்வமுடையவர்.  பால்புதுமையினருக்கு துணை நிற்கும், எட்டக் கூடும் மருத்துவப் பராமரிப்பு சேவை, (குறிப்பாக அரசு மையங்களில்) அமையும் வருங்காலத்தை எதிர்நோக்குகிறார்.

சுரேஷ் ராம்தாஸ்

சுரேஷ் ராம்தாஸ் 2004இல் HP நிறுவனத்தில் சர்வதேச பயிற்சித் தலைவராகப் பணியாற்றுகிறார். HP Pride Business Impact Network Chapterஇன் இந்தியப் பிரிவை, வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட ஒரு ஒருபாலீர்ப்பினராக தொடங்கி தலைமையேற்று நடத்திவருகிறார். தன்னுடைய பணியிடத்தை பால்புதுமையினரை மேலும் உள்ளடக்கியதாக்கும் விருப்பமும், Diversity & Inclusion குறித்த பரந்த புரிதலும் யூ.எஸ்.அமெரிக்காவின் DTUIஆல் அங்கீகரிக்கப்பட்ட Diversity Professional ஆவார். அதோடு Out & Equal Workplace Advocatesஇன் சர்வதேச fellowship நிகழ்விற்கு HPயிலிருந்து பரிந்துரைக்கப்பட்டு, கலந்துகொண்ட முதல் இந்தியரும் ஆவார்.

நிவேதா

அறிவியலில் (குறிப்பாக இயற்பியலில்) ஆர்வம் கொண்டவர். மின்னூல், ஒலி இதழ் தயாரிப்பு மற்றும் மெய்ப்பு சார்ந்து பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணா

சென்னைவாசியான கிருஷ்ணா அரசு பள்ளிகளுடன் பணியாற்றும்  ஒரு  கல்வியாளர்.

நிகழ்ச்சி இயக்குனர் மற்றும் தொகுப்பாளர்

கிரீஷ்

கிரீஷ் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் வரைகலைஞர். தற்போது விளம்பரத் துறைய்ல் பணியாற்றும் கிரீஷ் முன்னர் திரைத்துறையில் துணைக் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பால்புதுமையினர் நலனுக்காக செயல்படும் பல அரசுசாரா நிறுவனங்களோடும் சென்னையில் பணியாற்றியுள்ளார். 2015இல் ஆனந்த விகடனின்  கலாமின் காலடிச்சுவட்டில், களத்தில் 100 இளைஞர்கள் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவரது முதல் புத்தகமான விடுபட்டவை 2018 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியானது.

விழா இயக்குனர் மற்றும் பொறுப்பாளர்

மௌலி

மௌலி - சென்னையைச் சார்ந்த ஒருபாலீர்ப்புச் செயற்பாட்டாளர். குயர் சென்னை கிரானிக்கள்சின் நிறுவனர்களில் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர். வேலையிடங்களில் பால்புதுமையினரை உள்ளெடுத்துச் செயல்படுவது குறித்து கவனம் செலுத்தி செயல்படும் Diversity & Inclusion துறையைச் சார்ந்தவர்.

எல் ஜே வயலட்

எல் ஜே வயலட் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் குயர் சென்னை க்ரோனிகிள்சின் நிறுவனர்களில் ஒருவர். அவரது ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு மோக்லி பதிப்பகத்தாலும். குந்தரின் கூதிர்காலம் என்ற பராகுவேய நாவல் அவரது மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. எழுதிமுடிக்கப்படாத ஒரு நாவலில் வசிக்கும் அவர், பதிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.

©2017 - 2020 QCC Queer LitFest, Chennai

  • Instagram - White Circle
  • Twitter - White Circle
  • Facebook - White Circle
  • YouTube - White Circle
  • anchor-logo-qlf
qcc_watermark_logo.png

If you'd like to collaborate with us and for media contact, please write to qlf@queerchennaichronicles.com.